காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. மீதான வழக்கை உடனே ரத்து செய்ய வேண்டும் காங்கிரஸ் விவசாய பிரிவு வலியுறுத்தல்
தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து பேசிய கருத்து இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரணி நடத்தினர். அப்போது இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் நடத்திய பேரணிக்கு போட்டியாக நாட்டை மோசமான பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி எம்பிக்கள் பாராளுமன்ற கட்டிட நுழைவு வாயில் அருகில் நின்று கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கூட்டணி கட்சி எம்பிக்களை பாரதிய ஜனதா எம்பிக்கள் செல்லவிடாமல் தடுத்தனர்.அப்போது ஏற்பட்ட சம்பவத்தில் காயமடைந்த எம்பியைப் பார்க்கச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை வழக்கில் சேர்த்து, அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒரு சம்பவம் நடைபெற்றால் அது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பாராளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதிர்க்கட்சிகள் மீது அதிலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் மீது உடனே அவரது பெயரை வேண்டும் என்றே சேர்த்து வழக்கு பதிவு செய்வது பாரதிய ஜனதா கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு மேலும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. இந்தியாவின் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்து மிகவும் அமைதியானவர், எளிமையானவர், பழகுவதற்கு பண்பானவர், என அனைத்து நாட்டின் தலைவர்கள், ஏழை எளிய மக்கள் என அனைவராலும் பாராட்டப்பட்டு வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது எந்த விசாரணையும் நடத்தாமல் வழக்கு பதிவு செய்து நாட்டின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருப்பது காவி கட்சியின் கறை படிந்த நடவடிக்கைகளுக்கு மேலும் ஒரு படியாக அமைந்துள்ளது என்று தான் மக்கள் நினைக்கிறார்கள். மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் பற்றி கூறிய கருத்து நாட்டையே போராட்ட களத்தில் தள்ளி உள்ள நிலையில் அதை திசை திருப்ப மத்திய அரசு ஏவுதலின் பேரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பலிகேடா ஆக்க முயற்சி செய்வது உண்மை சம்பவத்தை மறைத்து சோற்றுக்குள் முழு பூசணிக்காயை மறைக்க முயலும் முயற்சியாகவே பார்க்க முடிகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்டால் பிரச்சனை முடிந்துவிடும். அதை விடுத்து விட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியையும் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்களையும் பழிவாங்க நினைத்து திசை திருப்ப முயற்சிப்பது பாரதிய ஜனதாவுக்கு தோல்வியையே கொடுக்கும்.நாட்டு மக்கள் அனைத்தையும் உற்று பார்த்து கொண்டு வருகிறார்கள்.ராகுல் காந்தி மீது இதற்கு முன்பு பாரதிய ஜனதா கொடுத்த நெருக்கடிகள் அனைத்தும் தோல்வில் தான் முடிந்திருக்கின்றன. இதுவும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு தோல்வியைத் தான் தேடித் தரும். எனவே சம்பவத்தை திசை திருப்பாமல் பாரதிய ஜனதா அரசு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்

No comments:
Post a Comment