இந்த ஆண்டின் கடைசி சூரிய உதய காட்சியை காண கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 31 December 2023

இந்த ஆண்டின் கடைசி சூரிய உதய காட்சியை காண கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்.


கன்னியாகுமரியில் சீசன் களை கட்டி உள்ளது. கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை இந்த ஆண்டின் கடைசி சூரிய உதய காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் திரண்டதால் கடற்கரை பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது.

அதேபோல முக்கடல் சங்கமத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கடலில் ஆனந்த குளியல் போட்டனர். பின்னர் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். இதனால் கோவிலில் இன்று அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசை காணப்பட்டது.இதேபோல கன்னியாகுமரி விவேகானந்தபுரம் கடற்கரையில் உள்ள திருப்பதி வெங்கடேஷ்வர பெருமாள் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 


கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் பயணம் செய்து பார்வையிட்டு திரும்பினர். இதனால் படகுத்துறையில் நீண்ட வரிசை காணப்பட்டது. விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் சுமார் 3 மணி நேரம் நீண்ட கியூவில் காத்திருந்தனர். இந்த கியூ சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருந்தது. மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், மியூசியம் போன்ற அனைத்து பொழுது போக்கு இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.


அதுமட்டுமின்றி கன்னியாகுமரியில் சன்னதி தெரு, தேரோடும் 4 ரதவீதிகள், மெயின்ரோடு பார்க்வியூ பஜார், காந்தி மண்டப பஜார், கடற்கரை சாலை, சன்செட் பாயிண்ட் கடற்கரைப்பகுதி போன்ற அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் கன்னியாகுமரியை சுற்றி உள்ள மற்ற சுற்றுலா தலங்களான வட்டக்கோட்டை பீச், சொத்த விளை பீச், திக்குறிச்சி பீச், திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, ஆசியாவிலேயே மிக நீளமான மாத்தூர் தொட்டிப்பாலம் போன்ற அனைத்து சுற்றுலா சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஒரே நேரத்தில் ஏராளமான பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலும் இரு சக்கர வாகனங்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்ததால் கன்னியாகுமரியில் இன்று அதிகாலை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.


இதைத்தொடர்ந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீசாருடன் சுற்றுலா போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இணைந்து பணியாற்றினார்கள்.

No comments:

Post a Comment