தமிழகத்தில் மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் அல்காலித் கோரிக்கை - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 18 June 2024

தமிழகத்தில் மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் அல்காலித் கோரிக்கை


தமிழகத்தில் மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் அல்காலித் கோரிக்கை 


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு, கடந்த மூன்றாண்டு ஆட்சியில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய பல்வேறு வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிவருகிறார். மகளிர்க்கு உரிமைத்தொகைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், பெண்களுக்கு கட்டணமில்லாத பேருந்து பயணம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மக்களிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதை மிகவும் வரவேற்கிறோம். அதேநேரத்தில் தேர்தல் அறிக்கையில் பிரதானமான இன்னொரு கோரிக்கை கிடப்பில் இருக்கிறது.



திமுக தனது தேர்தல் அறிக்கையில் மாதம் தோறும் மின் கட்டணம் வசூல் செய்யப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் அது இப்போதுவரை நிறைவேற்றப்படவில்லை. முதல் நூறு யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டாலும், மின்சாரக் கட்டணத்தைப் பொறுத்தவரை பயன்படுத்தும் மின் பயனீட்டு அளவைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. வழக்கமாக 2000 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் வரும் இல்லங்களுக்குக் கூட, கோடை காலத்தில் பயனீட்டு அளவைப் பொறுத்து மின்சார கட்டணம் 5000 ரூபாய்க்கு மேல் வந்தது.



இதனால் மிகவும் பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கத்தினர் தான். ஏழை, எளிய மக்களின் வீடுகளில் ஏ.சி உள்ளிட்ட வசதிகள் இருக்காது. இதனால் இவர்களுக்கு மின் கட்டணமும் குறைவாகவே இருக்கும். அதேநேரத்தில் வசதியானவர்கள் மின் கட்டணத்தைப் பற்றியே கவலைப்பட மாட்டார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் தவணைமுறை வாழ்க்கை வாழ்பவர்கள். அவர்கள் வீட்டில் ப்ரிட்ஜ், ஏசி, வாஷிங் மிஷின் உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் இருந்தாலும் அவர்களில் பலர் இ.எம்.ஐ முறையில் வாங்கியவர்கள் தான். இந்த மின் சாதனங்களைப் பயன்படுத்துவதால் அவர்கள் மின் கட்டணமும், மின் பயனீட்டு அளவும் அதிகமாக இருக்கும். இதனாலேயே தமிழக அரசு, மகளிருக்கு வழங்கிய 1000 ரூபாயும் நடுத்தர வர்க்கத்திற்கு கிடைக்கவில்லை. 



 இந்நிலையில் மின் கட்டணமானது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கீடு செய்யப்பட்டு, வசூலிக்கப்படுகிறது. இதனால் தவணைமுறையில் பொருள்களை வாங்கிப் பயன்படுத்தும் நடுத்தர வர்க்கத்தினர் செலுத்த வேண்டிய  மின் கட்டணம் மிக அதிக அளவில் உள்ளது. இதனால் அவர்களது இல்லங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை மின் கணக்கீட்டு அதிகாரி எழுதிச் சென்றதுமே, ஷாக் அடித்தது போல் உணர்கின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்ததுபோல் மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூல் செய்தால் நடுத்தர வர்க்கத்தினர் நிம்மதி அடைவார்கள்.



மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட அரசின் சலுகைகள் மின்சாரப் பயன்பாட்டு அளவினாலும், கட்டணம் செலுத்தும் தொகையினாலும் மறுக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்தினரின் விரக்தியையும் இதன் மூலம் அரசு மாற்ற இயலும். மதவாதம் மற்றும் பாசிச பாஜகவுக்கு எதிராக உறுதியாக முழங்கும் தமிழக அரசு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் என்னும் திட்டத்தையும் அறிவித்தால் மக்கள் பாராளுமன்றத்தில் அனைத்து தொகுதிகளிலும் கொடுத்த வெற்றியை அக மகிழ்ச்சியோடு  தொடர்வார்கள். இதன் மூலம் மக்கள் மனங்களிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்மை இடத்தைப் பிடிப்பார். அதற்கு தமிழக அரசும், மின்சார வாரியமும்  விரைந்து நடவடிக்கை எடுக்க  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்டத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். ”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment