இந்த பேருந்து நிலையத்தினுள் ஒரு பகுதி பத்மனாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு சிறுவணிக வளாகம் போல செயல்படுகிறது, இதனால் பயணிகளும், பொதுமக்களும் அதிகமாக வந்து போகின்றனர். மேலும் பயணிகளுக்காக நிழலகமும், ஓய்வறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை பயணிகள் பயன்படுத்தாதவாறு தனியார் வாகனங்கள் அத்துமீறி பேருந்து நிலையத்தினுள் நீண்ட நேரமாக பார்க் செய்து போகின்றனர், இது போக சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் பேருந்து நிலையத்தில் பார்க் செய்து உணவருந்த செல்கிறார்கள்.
பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கும் தனியார் வாகனத்தின் விளைவால் போக்குவரத்து நெரிசலும், சிலநேரங்களில் விபத்துகளும் நேரிடுகிறது, இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை தக்கலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு இளங்கோ தலைமையிலான போக்குவரத்து போலிஸார், பேருந்து நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்த தனியார் வாகனங்கள் அனைத்திற்கும் அபராதம் விதித்து அதிரடி காட்டினர்.
அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகளிடம் தனியார் வாகன பார்க்கிங்கால் ஏற்படும் மோசமான விளைவுகளையும் எடுத்துக்கூறி மீண்டும் இவ்வாறு அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை ஏற்படும் என எச்சரித்தனர், தக்கலை போக்குவரத்து போலிஸாரின் இந்த நடவடிக்கை பயணிகள் மத்தியில் பெரும்வரவேற்பை பெற்றது.
- தமிழக குரல் செய்திகளுக்காக குமாரி மாவட்ட செய்தி ஒருங்கிணைப்பாளர் கபீர்.

No comments:
Post a Comment