நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 23-வது மாநிலப் பொதுக்குழுவில் தீர்மானம் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 May 2023

நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 23-வது மாநிலப் பொதுக்குழுவில் தீர்மானம்


திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 23 வது மாநில பொதுக்குழு மேலாண்மை குழு தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் சுலைமான், பொதுச் செயலாளர் அப்துல் கரீம், பொருளாளர் இப்ராஹிம், துணைத் தலைவர் பாரூக், மாநிலச் செயலாளர்கள் செய்யது அலி, முகம்மது சேட், யூசுப், அப்பாஸ், செய்யது, பைசல், தாவூத் கைஸர், முகம்மது ஒலி மற்றும் மாவட்டம், கிளை நிர்வாகிகள் என 5000 க்கும் மேற்பட்ட  நபர்கள் கலந்து கொண்டனர். இப்பொதுக்குழு வாயிலாக  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1.  தவ்ஹீதும், தர்பியத்தும். 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எனும் இப்பேரியக்கம் பட்டிதொட்டி எங்கும் வேர் பரப்பி ஏகத்துவ பிரச்சாரத்தை செய்து வருகிறது, ஏராளமான கிளைகள், பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், இலட்சக்கணக்கான உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என அல்லாஹ்வின் அருளால் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. கொள்கை ரீதியான தொடர் எழுச்சிப் பயணத்திற்கு தனிநபர்களின் கொள்கை உறுதியும் மார்க்க அறிவும் இன்றியமையாதது.


இதை கருத்தில் கொண்டு “தவ்ஹீதும் தர்பியத்தும்" எனும் செயல்திட்டத்தை வரும் ஜுன் முதல் தேதியிலிருந்து செப்டம்பர் வரை (4 மாதங்கள்) நடைமுறைப்படுத்த வேண்டும் என மாநில தலைமை சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மிகச்சிறப்பாக  ஒவ்வொரு கிளை மர்கஸிலும் நிறைவேற்ற வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழுவின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.


2. கர்நாடக முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை அதிகமாக பெற்று தனிப்பெரும்பான்மை யுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது, மதவெறுப்பு அரசியல் செய்த முன்னால் பாஜக அரசு முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களின் உள்ளங்களை கீறி கிழித்தது. நீக்கப்பட்ட முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீட்டை திரும்ப தர வேண்டும் என கர்நாடகா மாநில அரசை இம்மாநில பொதுக்குழு வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.


3. அரசு பெண் மருத்துவர்

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவரை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பாஜகவினர் இதுபோல் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது. ஹிஜாப் எதிர்ப்பு பிரச்சாரத்தை தமிழகத்தில் கையிலெடுக்க பாசிச சக்திகள் முயற்சி செய்கின்றனர்.


அமைதிப் பூங்கா தமிழகத்தை மதவெறி பீடமாக்க நினைக்கும் செயல்களை முளையிலேயே கிள்ளி எரியும் வேலையை ஆளும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என இம்மாநில பொதுக்குழு வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.



4. தமிழ்நாடு மருத்துவ கல்லூரி

தமிழ்நாட்டில் உள்ள மூன்று மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற தமிழக அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவை மூலம் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் உருவாக்கபட்டுள்ளனர். 


பல சாதனைகளை படைத்து மிகச்சிறப்பான கட்டமைப்புடன் செயல்படக்கூடிய கல்லூரிகளில் சிறு பிள்ளை தனமான காரணங்களை சொல்லி அங்கிகாரத்தை ரத்து செய்வது ஒன்றிய அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகின்றது. பாஜக ஆளூம் மாநிலங்களுக்கு சலுகைகளை செய்து கொடுப்பது, மற்ற மாநிலங்களில் நெருக்கடி கொடுப்பது அவர்களின் வாடிக்கையாகிவிட்டது.


ஆண்டுக்கு 500 க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பாதிக்கும் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என இப்பொதுக்குழு வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.


5.  பாசிச பாஜக அரசு

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இஸ்லாமியர்களுக்கு விரோதமான சட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களிலும் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்கின்றன. இந்திய நாட்டில் சிறுபான்மை சமூகம் பாசிச சக்திகளால் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகிறது.


பசுவின் பெயரால், மதத்தின் பெயரால் முஸ்லிம்கள் கொல்லபடுகின்றனர். பலர் சிறைச்சாலைகளில் தள்ள படுகின்றனர். மாணவர்கள் மீது கூட கடுமையான வழக்குகள் பதியப்படுகின்றன. முஸ்லிம் பெண்கள் அப்ளிகேஷன் மூலமாக மானபங்கம் செய்யப்பட்டனர். ஹிஜாப் அனிய தடை, ஹலால் இறைச்சி தடை, ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல தடை, போராட்டம் நடத்தினால் புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது,  என்று சொல்லில் அடங்காத துயரங்களை சுமந்து கொண்டு முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம்.


முத்தலாக தடை சட்டம். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து 370 ஐ நீக்கியது. NIA விற்கு சிறப்பு அதிகாரங்கள், அடுத்து பொது சிவில் சட்டம் என்று முஸ்லிம்களை ஒடுக்கும் அனைத்து விஷயங்களையும்  பாசிச பாஜக அரசு செய்து வருகிறது. பாஜக அரசின் இந்த அத்துமீறல்களை வன்மையாக கண்டிக்கிறோம். அரசின் இந்த முஸ்லிம் விரோதப்போக்கினை ஜனநாயக ரீதியாக  எதிர் கொள்வோம்  என இம்மாநில பொதுக்குழு வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.


6. மத வெறுப்பு திரைப்படங்கள்

திரைப்படங்கள் வாயிலாக மக்களை பிரிக்கும் நாசகார வேலைகளை பாசிச சக்திகள் செய்து வருகின்றன. உண்மைக்கு மாற்றமான கற்பனை கதைகளை வைத்து மக்கள் உள்ளங்களில் நஞ்சை விதைக்க ஒரு போதும் நாங்கள் இடம் தர மாட்டோம். இது போன்ற தீய சக்திகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்வோம் என என இம்மாநில பொதுக்குழு வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.


7. மதவெறுப்பு பேச்சு

மதவெறுப்பு பேச்சு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளிக்கும் போது, மதம் என்ற பெயரில் நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்? அடிப்படை உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்க வேண்டிய கடமை கோர்ட்டுக்கு இருக்கிறது. 


வெறுப்பு பேச்சுகளை பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகாருக்காக காத்திருக்காமல், காவல் துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளனர். மதவெறுப்பு பேச்சுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.


8.  வெள்ளை அறிக்கை

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு நடைமுறையில் இருக்கும் கல்வி வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மூன்றரை சதவீத இடஒதுக்கீடு முறையாக பல துறைகளில் வழங்கப்படுவதில்லை. மதம் மாறி இஸ்லாத்தை தழுவியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. 


ரோஸ்டர் முறையில் சரியான வரிசை முறைப்படி இஸ்லாமியர்கள் பயன்பெற முடிவதில்லை. இஸ்லாமியர்களின் சதவீதத்தோடு ஒப்பிடுகையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு குறைவு. இதில் பல குளறுபடிகள் உள்ளது. தமிழக அரசு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அனைவரும் தெளிவாக அறியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.


தமிழகத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து விகிதாச்சார பிரிநிதித்துவ முறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என இப்பொதுக்குழுவின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.


9. தமிழகத்தில் இடஒதுக்கீடு 

கடந்த ஆட்சி காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலிதா வாக்களித்தார். அவர் வாழும் காலம் வரை அதற்கான எந்த முன்னெடுப்பையும் அவர் செய்யவில்லை. அவரின் மறைவிற்கு பிறகு அதிமுகவினர் பாஜகவின் அடிமைகளாக மாறி விட்டனர்.


சிறுபான்மையினரான முஸ்லிம்களின்  இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே தமிழக அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை சமுதாயத்தின் மொத்த வாக்குகளையும் பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தி தர வேண்டும் என்று இம்மாநில பொதுக்குழு வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.


10.  முஸ்லிம் சிறைவாசிகள்

தமிழக சிறை வாசிகள் ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால்  நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது இல்லை. மதத்தின் பெயரால் அவர்கள் மீது காட்டப்படும் இந்த  வேற்றுமை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், ஆதிநாதன் ஆணையத்தின் அறிக்கை மீதான நடவடிக்கையை மாநில அரசு விரைந்து எடுக்க வேண்டும் என இம்மாநில பொதுக்குழுவின்  வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.





11. பூரண மதுவிலக்கு

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பாக ரூபாய் 10 இலட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. மக்களின் வரிப்பணம் இப்படிக் குடும்பப் பொறுப்பு இல்லாமல் ஊதாரித்தனமாகக் கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு வழங்கப்படுகிறதே என்று மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.


குடிப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு எனும் போது அதை முற்றிலும் ஒழிக்க இதுவரை அரசு எந்த செயல் திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. கள்ளச்சாராயத்தை தடுக்க கூடிய அனைத்து வழிமுறைகளையும் அரசு நிறைவேற்றிப் பூரண மதுவிலக்கை நிறைவேற்ற வேண்டும் என இம்மாநில பொதுக்குழு வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.


12.  கல்வியில் கவனம் செலுத்துவோம். 

இஸ்லாமிய சமுதாயம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் அதில் ஒன்று கல்வியின்மையாகும். பல கோடி மக்களை கல்வி வேலைவாய்ப்பில் முன்னேற்றுவது என்பது ஒரு அரசுக்குத்தான் சாத்தியம் என்றாலும் இஸ்லாமிய சமூகம் தன்னளவில் செய்ய வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.


உயர்கல்வியில் தன்னை முன்னேற்றி கொள்ள தொடர்ந்து உழைக்க வேண்டும் எனும் செய்தியை தொடர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்போம் என இப்பொதுக்குழுவின் வாயிலாக அறிவித்து கொள்கிறோம்.

No comments:

Post a Comment