கடல் சீற்றங்களின் போது பொதுமக்களை மீட்கும் பயிற்சியின் (Ocean rescue operation) இறுதி நாள் நிகழ்ச்சி.... மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் செயல்முறையாக செய்து காண்பித்த பயிற்சி பெற்ற நபர்கள்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் லெமூர் கடற்கரைப் பகுதியில் நடந்த சம்பவங்கள் போன்று இயற்கை பேரிடர் காலங்களில் மற்றும் கடல் சீற்றங்களின் போது மீண்டும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை சார்பாக காவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்கள் 08-07-2024 அன்று கன்னியாகுமரியில் துவக்கி வைத்தார்.
சென்னையை சேர்ந்த "Stand Up Marinaa" என்ற அமைப்பிலிருந்து திரு. சதீஸ் மற்றும் குழுவினர் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள், ஊர் காவல் படை வீரர்கள், கடலோர கிராம இளைஞர்கள், மற்றும் தன்னார்வலர்கள் உட்பட 15 பேருக்கு பேரிடர் காலங்களில் கடல் அலையில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது மற்றும் கடல் சீற்றங்களின் போது மீட்கப்பட்ட நபர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது போன்ற பயிற்சியினை அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆகியோர் தலைமையில் இன்று 10-07-2024 லெமூர் கடற்கரையில் வைத்து பயிற்சி இறுதி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பயிற்சியினை பெற்றவர்கள் கடல் சீற்றங்களின் போது பொதுமக்களை எவ்வாறு மீட்பது , மீட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது உள்ளிட்ட செயல்முறைகளை தத்ரூபமாக ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் செய்து காண்பித்தனர்.
இப்பயிற்சி பெற்ற நபர்கள் கன்னியாகுமரி மற்றும் லெமூர் கடற்கரை பகுதிகளில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவர். இப்பயிற்சியினை அளித்த திரு.சதீஷ் குமார் மற்றும் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நினைவு பரிசுகளை வழங்கினர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை எடுக்கும் முயற்சிகளை தாண்டி, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது அறிவிக்கும் எச்சரிக்கைகளை முழுமையாக பின்பற்றி முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டு தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்
No comments:
Post a Comment