8 ஆண்டுகளாக தொடரும் அவலம்: விசிக பேனர் கிழித்து அவமதிப்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 7 September 2024

8 ஆண்டுகளாக தொடரும் அவலம்: விசிக பேனர் கிழித்து அவமதிப்பு.


 8 ஆண்டுகளாக தொடரும் அவலம்: விசிக பேனர் கிழித்து அவமதிப்பு. 


நடவடிக்கை எடுக்கத் தயங்கும்  காவல் துறையினர்... விசிக மாவட்ட செயலாளர் அல்காலித் கடும் கண்டனம்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல் காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோட்டாறு காவல்நிலைய ஆளுகைக்குட்பட்ட பகுதி ஊட்டுவாழ்மடம் சந்திப்பில் அக்டோபர் 2 ஆம் தேதி, கள்ளக்குறிச்சியில் விசிக சார்பில் நடத்தப்படும்  மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு குறித்து விசிகவின் மகளிர் விடுதலை இயக்கப் பொறுப்பாளர் கார்த்திகா முருகன் வைத்த பேனர் கிழிக்கப்பட்டது. பேனர் கிழித்தவரை  அடையாளம் சொன்ன பிறகும் கோட்டாறு காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.


ஊட்டுவாழ்மடம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேனர் கிழிக்கப்படுவது இது முதல்முறை அல்ல. ஆனாலும் காவலர்களின் அமைதி பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. கடந்த 8 வருடங்களாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளுக்கு வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகள் கிழிக்கப்படுவதும், எழுச்சித் தமிழரின் புகைப்படம் மீது மனிதக் கழிவினை தேய்த்து அவமதிப்பதும்  இதேபகுதியில் நடந்து வந்துள்ளது. ஊட்டுவாழ்மடம் பகுதியை உள்ளடக்கிய, நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளராக நான் பொறுப்புக்கு வந்து ஒன்றே கால் ஆண்டுகள் ஆகிறது.


எனக்கு முன்பு இப்பகுதியில் பொறுப்பாளராக இருந்தவர்கள் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக கோட்டாறு காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளனர். ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நான் மாவட்டச் செயலாளராக பொறுப்புக்கு வந்த பின்னர், கடந்த 2023 ஆம் ஆண்டு வெல்லும் ஜனநாயக மாநாடு தொடர்பாக ஊட்டுவாழ்மடத்தில் வைத்திருந்த பேனர் கிழிக்கப்பட்டது. இதேபோல் எழுச்சித் தமிழரின் பிறந்தநாளுக்கு வைக்கப்பட்ட பேனரும் கிழிக்கப்பட்டு இருந்தது.

 

இது தொடர்பாக விசிக சார்பில் புகார் கொடுத்ததும், காவல் நிலையத்திற்கு சிலரை  நேரில் அழைத்து விசாரித்த சார்பு ஆய்வாளர் சோபன், சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா இல்லை. நேரில் பார்த்த சாட்சியும் இல்லை எனத் தெரிவித்தார். இருந்தும் சிலரை விசாரணைக்கு அழைத்து எழுதி வாங்கிவிட்டு அனுப்பினார். அது தொடர்பாக இன்னும் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


நான் மாவட்ட செயலாளர்  பொறுப்புக்கு வருவதற்கும் ஆறு ஆண்டுகளாவே இது போன்ற இச்சம்பவம் ஊட்டுவாழ்மடத்தில் நடந்து வருகிறது என்று அதன் பின்னரே எனக்குத் தெரியவந்தது.


இந்நிலையில் விசிகவின் மகளிர் விடுதலை இயக்கப் பொறுப்பாளர் கார்த்திகா என்பவர் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு குறித்து மக்களுக்கு அறிவிப்பு செய்திடும் வகையில் ஊட்டுவாழ்மடத்தில்  பேனர் வைத்திருந்தார். அதற்கு முன்பு விசிக பேனர்களை கிழிப்பது யார் என அடையாளம் தெரியாமல் இருந்தது. ஆனால் இம்முறை இந்த பேனரை அதே பகுதியைச் சேர்ந்த கலைக்குமார் என்பவர் தன் நண்பர்களோடு சேர்ந்து கிழித்ததை நேரில் பார்த்த சாட்சியங்கள் இருக்கிறது. கோட்டாறு காவல் நிலையத்தில் இது தொடர்பாக நேரில் சென்று கடந்த 31 ஆம் தேதி புகார் கொடுத்தோம். போலீஸார் குற்றவாளியின் வீட்டைக் காட்டி கேட்டனர். சம்பந்தப்பட்ட பேனரை வைத்த கார்த்திகாவின் கணவர் முருகன் குற்றம் சாட்டியவரின் வீட்டைக்  காட்டிக் கொடுத்தார்.


போலீஸார் வீட்டிற்கு வந்து விசாரித்ததும் பேனரைக் கிழித்த கலைக்குமார், தன் மனைவியின் ஊரான மாதவாலயத்திற்குச் சென்று விட்டார் (பகலில் ஊட்டுவாழ் மடத்தில் கஞ்சா வியாபாரம், இரவில் மாதவலாயத்தில் குடும்ப கொண்டாட்டம்)


நேரடியாக குற்றவாளியின் பெயரைச் சொல்லியும் கூட அதன் பின்னர் போலீஸார் நடவடிக்கையே எடுக்கவில்லை. மாதவாலயத்திற்கும் செல்லாமல் மவுனம் காக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்று, அரசியலமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும் ஒரு அரசியல் கட்சியின் பேனரைக் கிழிப்பதும், எழுச்சித் தமிழரின் படத்தின் கண்ணியத்தை குறைக்கும் செயலில் ஈடுபடுவதும் கடுமையான கண்டனத்திற்கு உரியது.

8 ஆண்டுகளாக இச்சம்பவம் தொடர்ந்தும்,  கோட்டாறு காவல் நிலைய போலீஸாஎ குற்றவாளியைக் கைது செய்யத் தயக்கம் காட்டுவது ஏனோ? கோட்டாறு போலீஸார் இவ்விசயத்தில் துரித நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 7 ஆம் தேதி, சனிக்கிழமை அன்று  நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சம்பவத்திற்கு நீதிகேட்டு காவல்நிலையம் செல்லும் போராட்டம் நடத்தப்படும். அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment