குமரி. திருவட்டார் அருகே கல்லுப் பாலம் பகுதியில் மலை குன்றுகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
கன்னியாகுமரி மாவட்டம் மலைகளும் குன்றுகளும் அடங்கிய ஏற்றத்தாழ்வு பகுதியான மிகவும் செழுமை வாய்ந்த பகுதிகளாகும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி தொடங்கும் குமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளக் கொள்ளை ஜோராக நடந்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகள் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கனிமவள கொள்ளைக்கு அனுமதி அளித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு கனிமவள கொள்ளைக்கு துணையாக போன முன்னாள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நிகழ்வின் ஈரம் என்னும் காயவில்லை. வரலாற்றுச் சிறப்பு மிக்க மேற்கண்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கனிமவள கொள்ளையர்களுக்கும் கனிம வள கொள்ளைக்கு துணை போன மற்றும் போகும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகவே ஒலித்ததுள்ளது என்றால் மிகையல்ல. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணிகளுக்கு குமரியில் இருந்து மண் கிடைக்கவில்லை என்ற காரணத்தை கூறி பணிகள் கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர் நான்கு வழி சாலை பணிகளுக்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து மண் கொண்டு வருவதற்காக மீண்டும் புதிதாக டெண்டர் விடப்பட்டு சமீபத்தில் பணிகள் தொடங்கியது. ஆனால் அதன் பின்னர் நான்கு வழி சாலை பணிகளுக்கு எனக்கூறி மீண்டும் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு அதிகாரிகளின் துணையோடு சட்டவிரோத அனுமதி பெற்று மலைகளையும் மலை குன்றுகளையும் அழிக்கும் பணிகளை கனிம வள கொள்ளை கும்பல் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக திருவட்டார் அருகே கல்லு பாலம் பகுதியில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் உள்ள மலை குன்றை உடைத்து பாறைகள் மற்றும் மண் என அனைத்தையும் எடுத்துச் செல்ல முயற்சித்து உள்ளனர். நான்கு வழி சாலை பணிக்கு என கனிமவளத்தை கூறு போட வந்த கும்பல்கள் கூறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அந்த மலைக்குன்றை அழித்துவிட்டால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்படும் என்றும் மக்கள் வசிக்க இயலா பகுதியாக மாறிவிடும் என்றும் பொதுமக்கள் மனம் வருந்தினர். நான்கு வழி சாலை பணிக்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து மண் கொண்டு வருவதற்கு ஒப்பந்ததாரர்கள் அனுமதி பெற்று விட்டு தற்போது குமரி மாவட்டத்தில் அதிகாரிகளின் துணையோடு கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் துணை போய் வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் பணியிட மாறுதல் பெற்றுச்சென்ற மாவட்ட ஆட்சியர் செல்லும் முன்னர் சட்டவிரோதமாக மூன்று கல்குவாரிகளுக்கு அனுமதி அளித்து சென்றதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் நட்டாலம் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரிக்கு சட்டவிரோதமாக அனுமதி கொடுத்ததாக கூறி அனுமதி அளித்த அதிகாரிகளுக்கு சமீபத்தில் உயர் நீதிமன்றத்தால் 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட கஸ்தூரி ரங்கன் அறிக்கை படி மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட நகர்ப்புற வளர்ச்சி துறை அரசாணை எண் 49/2003 ன்படி பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட கனிமவள கொள்ளைக்கான அனுமதியை ரத்து செய்து நடவடிக்கை எடுப்பதோடு திருவட்டார் அருகே கல்லுப்பாலம் மற்றும் பள்ளியாடி அருகே முருங்கை விளை உட்பட பல இடங்களில் நிலச்சரிவு அபாயத்தை ஏற்படுத்தும் முயற்சியாக கொடுக்கப்பட்டுள்ள மலைக் குன்றுகளை அழிக்கும் சட்டவிரோதமான அனுமதிகளை ரத்து செய்ய நேர்மையான ஆட்சியராக இருந்தால் தற்போதைய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:
Post a Comment